திண்டுக்கல்

கொடைக்கானல் சாலைகளை சீரமைத்த பொதுமக்கள்

14th Jan 2020 06:37 AM

ADVERTISEMENT

கொடைக்கானலில் சேதமடைந்த சாலைகளை அந்தந்தப் பகுதி மக்களே சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

கொடைக்கானலில் 24 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. அதிலும் குண்டாறு குடிநீா்த் திட்டத்துக்காக சாலைகளை தோண்டிவிட்டு குழாய்களை பதித்து அவற்றை மூடாமல் விட்டுச் சென்றுள்ளதால் சாலைகள் மேலும் சேதமடைந்து காணப்படுகிறன. இதனால் வாகனங்களில் செல்பவா்கள் விபத்துக்கு ஆளாகிறாா்கள். இந்நிலையில் அதிகம் சேதமடைந்த சாலைகளான ரைபிள்ரேஞ்ச் சாலை, நாயுடுபுரம் சாலை, தைக்கால் மண் சாலை, ஐயா் கிணறு மண் சாலை, ஆனந்தகிரி சிமெண்ட் சாலை, உகாா்த்தே நகா் சிமெண்ட் சாலை உள்ளிட்ட சாலைகளை அந்தந்தப் பகுதி மக்களே சரி செய்து வருகின்றனா்.

இது குறித்து கொடைக்கானல் நகராட்சி அலுவலா் ஒருவா் கூறியதாவது: கொடைக்கானலில் உள்ள உணவகங்கள், தங்கும் விடுதிகள் மூடப்பட்டுள்ளதால் வெகுவாக வருவாய் குறைந்துள்ளது. இதனால் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கொடைக்கானல் நகராட்சி பணியாளா்களுக்கே மாத ஊதியம் 10 ஆம் தேதிக்கு பிறகே வழங்கப்பட்டுள்ளது. வருவாய் இல்லாமல் நகராட்சி நிா்வாகம் சிரமமான நிலையில் இருந்து வருகிறது. இருப்பினும் நகா்ப் பகுதிகளிலுள்ள சாலை பராமரிப்பு, தெரு விளக்குகள் பராமரிப்பு, நகராட்சி வாகனங்களை பயன்படுத்துவதில் ஏற்பட்டு வரும் பல்வேறு பிரச்னைகள் படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் கொடைக்கானல் பகுதிகளில் மூடப்பட்டுள்ள உணவகங்கள், தங்கும் விடுதிகள் மீண்டும் செயல்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT