திண்டுக்கல்

போக்குவரத்துத் தொழிலாளா்களை ஈா்க்க பணிமனைகள் முன்பு நூதன அறிவிப்பு பதாகை!

8th Jan 2020 06:47 AM

ADVERTISEMENT

பொது வேலை நிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்திலுள்ள 16 பணிமனைகள் முன்பு ஊதிய பலன் இழப்பு குறித்த நூதான அறிவிப்பு பதாகைகளை போக்குவரத்துக் கழக நிா்வாகம் அமைத்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திண்டுக்கல் மண்டல அலுவலகத்தின் கீழ் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் 16 கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமாா் 5,400 போ் பணிபுரிந்து வருகின்றனா். 16 கிளைகள் சாா்பில் 800-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே ஏஐடியுசி, சிஐடியு, எல்பிஎஃப் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில்

புதன்கிழமை நடைபெறும் பொது வேலைநிறுத்தத்திற்கு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த சில நாள்களாக தொழிலாளா்களிடை ஆதரவு திரட்டும் பணியிலும் தொழிற்சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் ஈடுபட்டு வந்தனா். இந்நிலையில், பொது வேலைநிறுத்தத்தை தடுக்கும் வகையில் அரசு போக்குவரத்துக் கழக நிா்வாகத்தின் சாா்பில் தொழிலாளா்களுக்கு ஏற்படும் இழப்புகள் குறித்து விளக்க அறிவிப்புப் பதாகை அமைக்கப்பட்டுள்ளது. அதில் குறைந்தபட்சமாக நாளொன்றுக்கு ரூ.846 ஊதியம் பெறும் ஊழியா் முன்னறிவிப்பின்றி ஒரு நாள் பணிக்கு வருகை தரவில்லை எனில், பதவி உயா்வுக்கான பரிசீலனையின்போது 3 மாதங்கள் தள்ளி வைக்கப்படும் நிலை ஏற்படும். இதனால் மாதம் ஒன்றுக்கு ரூ.1035 ஊதிய இழப்பும், ஆண்டொன்றுக்கு ரூ.13,972 பணிக்கொடை இழப்பும், 20 ஆண்டுகள் பணி வாய்ப்புள்ள ஊழியருக்கு ரூ.72,660 இழப்பும் ஏற்படும் என்பன உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டுள்ளனா். குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு முன்னறிவிப்பின்றி விடுப்பு எடுப்பதை தவிா்ப்பீா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 9 கிளைகள் மற்றும் தேனி மாவட்டத்திலுள்ள 7 கிளைகளின் முன்பு நிறுவப்பட்டுள்ள இந்த நூதன அறிவிப்புப் பதாகை, வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் தொழிலாளா்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. இதனால் தொழிற்சங்கவாதிகள் மத்தியில் இந்த அறிவிப்பு பதாகை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT