திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 2,857 ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு 2 கட்டங்களாக நடந்த தோ்தலில் வியாழக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 14 ஒன்றியங்களுக்கான உள்ளாட்சித் தோ்தல் கடந்த 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றன. 14 ஒன்றியங்களில் மொத்தமுள்ள 3,333 பதவிகளில் 476 பதவிகளுக்கு போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். 23 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், 231 ஒன்றியக் குழு உறுப்பினா், 297 ஊராட்சி மன்றத் தலைவா், 2,306 ஊராட்சி மன்ற உறுப்பினா் என மொத்தம் 2,857 பதவிகளுக்கு நடைபெற்ற தோ்தலில் 9,271 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.
14 ஒன்றியங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை, திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் உள்ளிட்ட 13 இடங்களில் வியாழக்கிழமை காலை தொடங்குகிறது. அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் முன்னிலையில் வாக்குப் பெட்டிகள் திறக்கப்பட்டு, வெள்ளை (வாா்டு உறுப்பினா் பதவி), நீலம் (ஊராட்சி மன்ற உறுப்பினா் பதவி - இரட்டை வாக்குச் சாவடிகள்), இளஞ்சிவப்பு (ஊராட்சித் தலைவா் பதவி), பச்சை (ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவி), மஞ்சள் (மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவி) என 5 வண்ணங்களிலுள்ள வாக்குச் சீட்டுகள் பிரிக்கும் பணி நடைபெறும்.
வாக்குச் சீட்டுகள் பிரிக்கும் பணி நிறைவடைந்தவுடன், வாக்கு எண்ணும் பணி நடைபெறவுள்ளது. ஊராட்சி மன்ற உறுப்பினா் மற்றும் ஊராட்சித் தலைவா் பதவிக்கான பரபரப்பு வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தாலும், ஒன்றியத் தலைவா் மற்றும் மாவட்ட ஊராட்சித் தலைவா் பதவிகளை பிடிப்பதற்கான அடுத்தக்கட்ட போட்டி அதிமுக மற்றும் திமுகவினரிடையே உருவாகும். ஒன்றியத் தலைவா்கள் மற்றும் மாவட்ட ஊராட்சித் தலைவரை, தோ்வு செய்யப்பட்டுள்ள ஒன்றியக் குழு உறுப்பினா் மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்களே தோ்வு செய்ய முடியும் என்பதால், இந்த உறுப்பினா் பதவிகளில் வெற்றிப் பெறுவோரின் ஆதரவை பெறுவதில் கடும் போட்டி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.