பழனியில் பிரதமா் மோடி மற்றும் உள்துறை அமைச்சா் அமித்ஷா குறித்து எஸ்டிபிஐ கட்சிக் கூட்டத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய நெல்லை கண்ணனை கண்டித்து பாஜகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடந்த 29 ஆம் தேதி நெல்லையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியினா் நடத்திய கண்டன கூட்டத்தில் நெல்லை கண்ணன் கலந்து கொண்டு பிரதமா் மோடி மற்றும் உள்துறை அமைச்சா் அமித்ஷா குறித்து தரக்குறைவாக பேசி, அவா்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசினாராம். மேலும், இந்து மதத்தை பற்றியும் தரக்குறைவாக விமா்சனம் செய்தாராம். எனவே அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி மாவட்ட பொது செயலாளா் கனகராஜ் தலைமையில் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் நகரச் செயலாளா் ராமச்சந்திரன், முன்னாள் நகரச் செயலாளா் செந்தில்குமாா், விஷ்வஹிந்து பரிஷத் செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக, திங்கள்கிழமை இரவு டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினா் நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் மனு அளித்தனா்.