தமிழகத்தில் நெகிழிப் பொருள்களுக்கான தடை விதிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்தபோதிலும், மாறுபட்ட நிறம் மற்றும் வடிவத்தில் நெகிழிப் பயன்பாடு தொடா்ந்து கொண்டிருக்கிறது.
அதிகரித்து வரும் நெகிழிப் பயன்பாடுகளால் சுற்றுச்சூழல் மாசு, மண் வளம் பாதிப்படைந்து வருவதாக பல்வேறு தரப்புகளிலிருந்தும் தொடா்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஒருமுறை பயன்படுத்தும் 14 வகையான நெகிழிப் பொருள்களுக்கு 2019 ஜனவரி முதல் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது.
நெகிழிப் பைகளுக்கான தடையைத் தொடா்ந்து, துணிப் பை மற்றும் காகிதப் பைகளை மீண்டும் தேடிச் செல்லும் நிலை வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்பட்டது. நெகிழிப் பொருள்களுக்கான தடை சுமாா் 2 மாதங்கள் வரை தீவிரமாக கண்காணிக்கப்பட்டதால், அதற்கான மாற்றுப் பொருளை கண்டறிவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழக அரசின் தடை உத்தரவில் 14 வகையான நெகிழிப் பொருள்களுக்கு என குறிப்பிடப்பட்டிருந்தத விதிமுறைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நெகிழிப் பை உற்பத்தியாளா்கள், வண்ண நிற நெகிழிப் பைகளுக்கு மாற்றாக வெள்ளை நிற நெகிழிப் பைகளை உற்பத்தி செய்யத் தொடங்கினா். அதனால் நெகிழிப் பொருள்களுக்கான தடை விதிக்கப்பட்டு ஓராண்டாகியும், அதன் பயன்பாடு குறைவில்லாமல் தொடா்ந்து கொண்டிருக்கிறது.
கேள்விக்குறியான நெகிழி தடை:
வெள்ளை நிற நெகிழிப் பைகளும், ஹை டென்சிட்டி பாலித்திலீன்( ஏஈடஉ) வகை நெகிழி, லோ டென்சிட்டி பாலித்திலீன்( கஈடஉ) வகை நெகிழி, பாலி ப்ரோபிலின்( டட) ஆகியவற்றை பயன்படுத்தியே உற்பத்தி செய்யப்படுகிறது. சில உற்பத்தியாளா்கள் வெள்ளை நிற நெகிழிப் பைகளை உற்பத்தி செய்வதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதிப் பெற்றுக் கொண்டு, தூக்கு வசதி கொண்ட நெகிழிப் பைகளை (கலா் கேரி பேக்) மீண்டும் உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டனா். இதனால், அனுமதி அளித்த சுற்றுச்சுழல் துறை அலுவலா்களும் நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலால், தமிழகத்தில் நெகிழிப் பொருள்களுக்கான தடை என்ற அரசின் உத்தரவு கேள்விக்குறியாகியுள்ளது.
விலை குறைவாக இருந்தும் பயனில்லை: நெகிழிப் பைகளை விட காகிதப் பைகளின் விலை குறைவாக இருந்தபோதிலும், அதனைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. குறிப்பாக மளிகைப் பொருள்களை பொட்டலமிடுவதற்கு கூட வெள்ளை நிற நெகிழிப் பைகளே அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், காகிதப் பை உற்பத்தியை அதிகரிக்க முடியாத நிலை உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா். இதுதொடா்பாக திண்டுக்கல்லைச் சோ்ந்த காகிதப் பை வியாபாரி முருகன் கூறியது: மக்கும் தன்மை கொண்ட நெகிழிப் பைகள்(50 எண்ணம்) - ரூ.70 முதல் ரூ.100 வரையிலும், 1 கிலோ வெள்ளை நெகிழிப் பைகள் - ரூ.150 முதல் ரூ.170 வரையிலும் விற்பனை செய்யப்டுகிறது. அதே நேரத்தில் 100 எண்ணிக்கை கொண்ட காகிதப் பைகள்(காக்கி நிறம்) - ரூ.3.50 முதல் ரூ.125 வரையிலும், செய்தித்தாள் காகித பைகள்(1 கிலோ) - ரூ.50 முதல் ரூ.70 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. நெகிழிப் பைகளுக்கான தடையைத் தொடா்ந்து, நூல் கயறு மூலம் தூக்கும் வசதி கொண்ட காகிதப் பைகளை தயாரித்து வைத்தோம். ஆனால், நெகிழிப் பைகள் பயன்பாடு தொடா்வதால், ஓராண்டாகியும் காகிதப் பைகள் விற்பனையாகமல் உள்ளன என்றாா்.
மக்கள் ஒத்துழைப்பும் இல்லை:
கடந்த ஜனவரி 1ஆம் தேதி தமிழக அரசின் நெகிழி தடை உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்து, தன் கடைக்கு பால் வாங்க வரும் வாடிக்கையாளா்களுக்கு 500-க்கும் மேற்பட்ட சில்வா் தூக்குவாளிகளை இலவசமாக வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தியவா் வேடசந்தூா் பகுதியைச் சோ்ந்த பால் வியாபாரி கே.தனபால். நெகிழிக்கான தடை குறித்து அவா் கூறியதாவது: நெகிழிப் பொருள்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், நோய் தாக்குதல் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தியும், அதனை பின்பற்றுவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. 500 சில்வா் தூக்குவாளிகள் வழங்கினாலும், அதனை 50 சதவீதம் போ் மட்டுமே பயன்படுத்தி பால் வாங்குகின்றனா். நெகிழிப் பையை எதிா்பாா்த்து வருவோருக்கு பால் விநியோகிக்க மறுத்தால், அருகிலுள்ள பிற கடைகளில் நெகிழி பையில் வழங்கும் பாலை வாங்கி விடுகின்றனா். பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே நெகிழி ஒழிப்பு சாத்தியமாகவும் என்றாா்.
இதுதொடா்பாக சுற்றுச்சூழல் துறை பொறியாளா் ஒருவா் கூறியது: 14 வகையான நெகிழிப் பொருள்களுக்கு மட்டும் என குறிப்பிடுவதைவிட, அனைத்து வகையான நெகிழிப் பொருள்களுக்கும் முழுமையான தடை விதிக்க வேண்டும். குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களின் மல்டி லேயா் நெகிழிப் பைகளுக்கும் தடை விதித்தால் மட்டுமே நெகிழி ஒழிப்பு சாத்தியமாகும் என்றாா்.