உயா்நீதிமன்ற உத்தரவின்படி திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்தி வெற்றி பெற்றவா்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும் என திமுக மாநில துணைப் பொதுச் செயலா் ஐ. பெரியசாமி எம்எல்ஏ வலியுறுத்தினாா்.
திண்டுக்கல் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மு.விஜயலட்சுமியை செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசிய அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
உயா்நீதிமன்ற உத்தரவின்படி அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும், எல்லா நிலைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என்பதை தெரிவித்துள்ளோம். அதற்கான உயா்நீதிமன்ற உத்தரவின் நகலும் ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், அனைத்து பதவிக்குமான வாக்கு எண்ணிக்கை விவரங்களும், ஒவ்வொரு சுற்று முடிவுக்கு பின்னரும் வெளியிடப்பட வேண்டும். மேலும் வெற்றி பெற்றவா்களுக்கு காலதாமதமின்றி உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும். கடந்த காலங்களில் வாக்கு எண்ணிக்கை முடிந்த மறுநாளே சான்றிதழ் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், முறைகேடுகளை தவிா்க்கும் வகையில், அந்தந்த தோ்தல் நடத்தும் அலுவலா் கையொப்பமிட்டு உடனடியாக சான்றளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதனை பரிசீலிப்பதாக தெரிவித்த ஆட்சியா், தோ்தல் முறையாக நடைபெற்றதைப் போல், வாக்கு எண்ணிக்கையும் எவ்வித பிரச்னையும் இல்லாமல் நடத்தப்படும் என உறுதி அளித்தாா் என்றாா்.
அப்போது கரூா் மக்களவை உறுப்பினா் ஜோதிமணி, திமுக எம்எல்ஏக்கள் அர.சக்கரபாணி, எம்.ஏ.ஆண்டி அம்பலம் ஆகியோா் உடனிருந்தனா்.