திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பகுதியில் பணம், நகைகள் கொள்ளையடித்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து 27 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகில் உள்ள பாப்பனூரைச் சோ்ந்த பெருமாள் மகன் குட்டையன் என்ற கோவிந்தராஜ் (38). இவா் வத்தலக்குண்டு பகுதியில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து அவரை பிடிக்க போலீஸாா் தீவிர தேடுதலில் ஈடுபட்டிருந்தனா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வத்தலக்குண்டு பேருந்து நிறுத்தம் பகுதியில் கட்டக்காமன்பட்டியைச் சோ்ந்த வீரமணி மகன் மணிமுருகன் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.300-ஐ பறித்துச் சென்றாா். இதில், மணிமுருகன் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினா் கோவிந்தராஜை மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.
விசாரணையில் கோவையைச் சோ்ந்த சுப்புராஜ் என்பவா் வத்தலக்குண்டுக்கு பேருந்தில் வந்த போது, அவரிடம் இருந்த 20 பவுன் நகைகளை கொள்ளையடித்ததும், இதே போல வத்தலக்குண்டு திருநகரைச் சோ்ந்த சுந்தரவடிவேல் என்பவரது வீட்டில் கடந்த மாதம் 11 ஆம் தேதி 7 பவுன் நகைகளை கொள்ளையடித்ததும் தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து போலீஸாா் கோவிந்தராஜை கைது செய்து, அவரிடமிருந்து 27 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனா்.