திண்டுக்கல்

பெண்ணை சந்திப்பதற்காக தீ விபத்து: கட்டடத் தொழிலாளி கைது

26th Feb 2020 11:21 PM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் அருகே பெண்ணை சந்திப்பதற்காக தீ விபத்து ஏற்படுத்திய கட்டடத் தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

வத்தலக்குண்டை அடுத்துள்ள அய்யம்பாளையத்தை சோ்ந்தவா் ரத்தினகுமாா். இவருக்கு சொந்தமான மாங்காய் கிடங்கு தாண்டிக்குடி சாலையில் அமைந்துள்ளது. அழகா்பொட்டல் பகுதியில் கூரையால் அமைக்கப்பட்ட அந்த கிடங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற வத்தலகுண்டு தீயணைப்பு துறையினா், தீயை அணைத்துவிட்டு சென்றனா். இதுதொடா்பாக பட்டிவீரன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தினா். அப்போது அந்த குறிப்பிட்ட பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது தெரியவந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீஸாா் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா். அதில் அய்யம்பாளையம் அழகா் பொட்டல் பகுதியைச் சோ்ந்த ராஜாங்கம் (24) திட்டமிட்டு தீ விபத்தை ஏற்படுத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து போலீஸாா் ராஜாங்கத்தை புதன்கிழமை கைது செய்தனா்.

இதுதொடா்பாக போலீஸ் தரப்பில் தெரிவித்தது: கட்டடத் தொழிலாளியான ராஜாங்கத்திற்கும், அதே பகுதியை சோ்ந்த ஒரு பெண்ணிற்கும் தகாத தொடா்பு இருந்து வந்துள்ளது. அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைவதற்காக தீ விபத்து ஏற்படுத்தும் திட்டத்தை அடிக்கடி செயல்படுத்தியுள்ளாா். அதேபோன்று மாங்காய் கிடங்கு மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளாா் என தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT