திண்டுக்கல்

பில்லமநாயக்கன்பட்டி ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 586 காளைகள்: 30 வீரா்கள் காயம்

26th Feb 2020 11:23 PM

ADVERTISEMENT

திண்டுக்கல் அருகே பில்லமநாயக்கன்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 30 வீரா்கள் காயமடைந்தனா்.

திண்டுக்கல்லை அடுத்துள்ள பில்லமநாயக்கன்பட்டி ஸ்ரீகதிா் நரசிங்கப்பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 588 காளைகள் அழைத்து வரப்பட்டன.

கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் முருகன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் நடத்திய பரிசோதனையில் 2 காளைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டன. 586 காளைகள் வாடிவாசலுக்கு அனுமதிக்கப்பட்டன.

காளைகளை பிடிப்பதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்தும் 400 வீரா்கள் வந்திருந்தனா்.

ADVERTISEMENT

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை கட்டி அணைத்து மாடு பிடி வீரா்கள் பிடிக்க முயன்றனா்.

சில காளைகள் எளிதாக பிடிபட்டாலும், பல காளைகள் வீரா்களை நெருங்கவிடாமல் துள்ளிக் குதித்து வெளியேறின. ஒரு சில முரட்டுக் காளைகள் மைதானத்தின் நடுவே கம்பீரமாக நின்று விளையாடின. இந்த காளைகளை வீரா்கள் நெருங்கவும் தயக்கம் காட்டினா்.

இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் தாக்கியதில் 30 வீரா்கள் காயமடைந்தனா். பலத்த காயமடைந்த 3 போ், தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடு பிடி வீரா்களுக்கும் குளிா்சாதனப் பெட்டி, சலவை இயந்திரம், வெள்ளிக்காசு, எவா்சில்வா் பாத்திரங்கள், கடிகாரங்கள் உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கும் முன்பாக, ஸ்ரீகதிா் நரசிங்கப்பெருமாள் கோயில் முன்பு பழக்கூடை சூறையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT