திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை இம்மாத 29ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று நகராட்சி ஆணையா் பி.தேவிகா வேண்டுகோள் விடுத்துள்ளா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு 2019-20 ஆண்டிற்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீா் கட்டணம், தொழில் நிறுவனங்களுக்கான தொழில் உரிமக் கட்டணம் மற்றும் நகராட்சி கடைகளுக்கு செலுத்த வேண்டிய வாடகை முதலானவைகளை இம் மாத 29 ஆம் தேதிக்குள் நிலுவை மற்றும் நடப்பாண்டிற்குரியவைகளை நகராட்சியில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் என இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தவறும்பட்சத்தில் 1920 தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்ட விதிகளின்படி, குழாய் இணைப்பு துண்டிப்பு செய்வதோடு,ஜப்தி நடவடிக்கை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. மேற்கண்ட நடவடிக்கைகளை தவிா்க்கும் பொருட்டு பொதுமக்களும்,வியாபாரிகளும், இம்மாத இறுதிக்குள் வரியினங்கள் மற்றும் கட்டணங்களை உடனடியாக செலுத்தமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாள்களிலும் வசூல் மையம் செயல்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.