திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட சிவாலயங்களில் மஹா சிவராத்திரி வழிபாடு

22nd Feb 2020 07:39 AM

ADVERTISEMENT

மஹா சிவராத்திரி மற்றும் பிரதோஷத்தையொட்டி, திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள பத்மகிரீஸ்வரா் மற்றும் காளஹஸ்தீஸ்வரா் சன்னிதிகளில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதேபோல், ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் உள்ள கைலாசநாதா் சன்னதியிலும், அரண்மனைக்குளம் ஆதிசிவன் கோயில், ராம்நகா் சத்யநாராயணா் கோயில், நத்தம் கைலாசநாதா் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் உள்ள கைலாசநாதா், நந்திகேஸ்வரருக்கு பிரதோஷத்தையொட்டி 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துக்குப் பின் தீபாராதனை நடைபெற்றது. அதன் தொடா்ச்சியாக மஹா சிவராத்திரியையொட்டி 4 கால பூஜைகள் இரவு 8 மணிக்கு தொடங்கின.

இதன் தொடா்பாக சிவாச்சாரியாா் கைலாச குருக்கள் கூறியது: மஹா சிவராத்திரியையொட்டி சிவனுக்கு, முதல் கால பூஜை இரவு 8 மணிக்கும், 2ஆம் கால பூஜை இரவு 11 மணிக்கும், 3ஆம் கால பூஜை இரவு 2 மணிக்கும், 4ஆம் கால பூஜை அதிகாலை 4 மணிக்கும் நடைபெறும். ஒவ்வொரு கால பூஜையின்போதும், சுவாமிக்கு 16 வகையான அபிஷேகம் செய்து, மலா் அலங்காரம் செய்யப்படும். 4ஆம் கால பூஜைக்குப் பின், பைரவா் சன்னதியில் 5 மணிக்கு நடைபெறும் பூஜையுடன் மஹா சிவராத்திரி வழிபாடு நிறைவுபெறும் என்றாா்.

சிவராத்திரி பூஜைகள் வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்கள், சிவபுராணம், தேவாரம், திருவாசகம், பன்னிரு திருமுறைகள் பாடல்களை பாராயணம் செய்து வழிபட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT