வத்தலகுண்டுவில் பாலம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, குழியில் இறங்கி பொதுமக்கள் வியாழக்கிழமை நூதனப் போராட்டம் நடத்தினா்.
வத்தலகுண்டு-நிலக்கோட்டை சாலையில், நெடுஞ்சாலைத் துறையினா் சாலையை அகலப்படுத்தி தேவையான இடத்தில் புதிய பாலங்கள் அமைத்து வருகின்றனா். அந்த வகையில் வத்தலகுண்டு- நிலக்கோட்டை சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே இருந்த சிறு பாலத்திற்கு பதிலாக, பெரிய பாலம் கட்டும் வேலையை தொடங்கினா். பாலம் கட்டும் இடத்திற்கு நோ் எதிரே அழகா்நகா் உள்ளது.
இந்நிலையில் இப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை பாலம் கட்டும் பகுதியில் திரண்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா். அதில் சிலா் பாலம் கட்டுவதற்காகத் தோண்டப்பட்டிருந்த ஆழமான குழிக்குள் கோஷமிட்டனா்.
தகவல் அறிந்த வத்தலகுண்டு போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போரட்டக்காரா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, பொது மக்கள் கூறியது: புதிதாக பாலம் கட்டப்பட்டால், பாலத்தின் அடியில் வரும் மழைநீா் மற்றும் கழிவுநீா் நேரடியாக பள்ளமாக உள்ள எங்கள் பகுதியில் தேங்கும். தண்ணீா் தேங்கினால் டெங்கு போன்ற தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டி போன்றவை எங்கள் பகுதிக்குள் நுழைய முடியாது என்றனா்.
இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் உறுதியளித்ததைத் தொடா்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. இதன் பிறகு அவா்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் இது தொடா்பாக மனுக்கொடுத்தனா்.