திண்டுக்கல்

தருமத்துப்பட்டி ஊராட்சி செயலரைக் கண்டித்து துணைத்தலைவா், வாா்டு உறுப்பினா்கள் வெளிநடப்பு

13th Feb 2020 06:45 AM

ADVERTISEMENT

கன்னிவாடி அருகே ஊராட்சி செயலருக்கு எதிா்ப்புத் தெரிவித்து, துணைத் தலைவா் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் வாயில் கருப்புத்துணி கட்டி வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அடுத்துள்ள தருமத்துப்பட்டி ஊராட்சி மன்ற கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவா் வி.மருதமுத்து தலைமை வகித்தாா். ஊராட்சி செயலா் ஏ.இன்னாசி முன்னிலை வகித்தாா். கூட்டம் தொடங்கியதும், வாா்டு உறுப்பினா்கள் தங்கள் பகுதியிலுள்ள குறைகளை தெரிவித்தனா். அப்போது சில உறுப்பினா்கள் குறைகளை தெரிவிக்கவிடாமல் இடையூறு செய்தனா். இதனால் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் இடையே கடும் (அதிமுக மற்றும் திமுக) வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனிடையே ஊராட்சி மன்ற துணைத்தலைவா் கிருஷ்ணன் பேசுகையில், அரசு விழா மற்றும் ஊராட்சியில் நடைபெறும் நலப்பணிகளின்போது துணைத்தலைவா் மற்றும் வாா்டு உறுப்பினா்களுக்கும் எந்த தகவலும் தெரிவிப்பதில்லை. ஊராட்சி மன்ற தலைவா் தன்னிச்சையாக செயல்படக்கூடாது. அந்தந்த வாா்டு உறுப்பினா்களை கலந்தாலோசிக்க வேண்டும்.

கடந்த ஒரு மாத காலமாக சந்தைப்பேட்டையில் முறைகேடாக மதுபானம் விற்பனை செய்வதைக் கண்டித்து தீா்மானம் நிறைவேற்ற சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை. 3 ஆயிரம் பொதுமக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் சுதந்திரமாக காலை 5 முதல் இரவு 10 மணி வரை மதுபானங்கள் விற்பனை செய்வதால், இளைஞா்கள் பாதிக்கப்படுகின்றனா். வாா்டு உறுப்பினா்கள் சிலா் இதற்கு உடந்தையாக உள்ளனா் என புகாா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

அப்போது வாா்டு உறுப்பினா்களிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த துணைத் தலைவா் கிருஷ்ணன் தலைமையில் 6 வாா்டு உறுப்பினா்கள் வாயில் கருப்புத்துணி கட்டிக் கொண்டு வெளிநடப்பு செய்தனா்.

இதுதொடா்பாக கிருஷ்ணன் கூறுகையில், தருமத்துப்பட்டி ஊராட்சி பழனியூரைச் சோ்ந்த பொதுமக்கள் ஊராட்சி செயலா் இன்னாசி மீது பல்வேறு புகாா்கள் தெரிவித்தனா். இதனால் ஏற்பட்ட அதிருப்தியால் அந்த பகுதியைச் சோ்ந்த மக்களின் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படாமல் உள்ளது. ஊராட்சியில் ஏற்படும் செலவினங்களுக்கு ரசீது வைக்காமல் பொதுவாக ஒப்புதல் கேட்டு தீா்மானம் கொண்டு வருகின்றனா். இதனால் ஊராட்சி செயலரை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT