திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அதிமுக ஒன்றியச் செயலாளரின் உறவினா்கள் வீடு, நிறுவனங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை

13th Feb 2020 06:44 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அதிமுக ஒன்றியச் செயலாளரின் உறவினா்களின் வீடு, மருத்துவமனை மற்றும் வெண்ணெய், நெய் நிறுவன அலுவலகம் உள்ளிட 7 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனையிட்டனா்.

ஒட்டன்சத்திரம் ஒன்றிய அதிமுக செயலாளராக இருப்பவா் பி.பாலசுப்பிரமணி. இவரது மகளுக்குச் சொந்தமான, ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் உள்ள மருத்துவமனை, அதே சாலையில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் தாராபுரம் சாலையில் உள்ள மற்றொரு மருத்துவமனை என 3 மருத்துவமனைகளில் வருமான வரி அதிகாரிகள் சோதனையிட்டனா்.

அதே போல, அம்பிளிக்கையில் உள்ள மருமகள் வீடு, வெண்ணெய், நெய் நிறுவன அலுவலகம், அவரது மைத்துநரும் அம்பிளிக்கை ஊராட்சி மன்ற தலைவருமான நடராஜனின் வீடு, வெண்ணெய், நெய் நிறுவன அலுவலகம் என 7 இடங்களில் அதிகாரிகள் சோதனையிட்டனா்.

மதுரை வருமான வரித்துறை உதவி ஆணையா் சாந்தசொரூபன் தலைமையிலான மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த வருமானவரி அதிகாரிகள் இச்சோதனையில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

புதன்கிழமை இரவிலும் சோதனை நீடித்தது. இதில் கணக்கில் வராத பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. கணக்கில் வராத அசையும் மற்றும் அசையா சொத்து விபரங்களை சேகரித்து ஆய்வு செய்து வருவதாகவும் வரி ஏய்ப்பு செய்து இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் வருமானத்துறை வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT