பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை திருக்கல்யாணம் மற்றும் வெள்ளித் தேரோட்டம் நடைபெறுகிறது. மேலும் விழாவை முன்னிட்டு 5 நாள்களுக்கு தங்கத்தோ் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் கடந்த 2 ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் தம்பதி சமேதா் முத்துக்குமார சுவாமி வெள்ளி ஆட்டுக்கிடா, புதுச்சேரி சப்பரம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா எழுந்தருளினாா். புதன்கிழமை இரவு வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து வெள்ளிகாமதேனு வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் உலா எழுந்தருளினாா். வெள்ளிக்கிழமை திருக்கல்யாணம் மற்றும் வெள்ளித்தேரோட்டம் நடைபெறுகிறது. சனிக்கிழமை முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நடைபெறவுள்ளது.
விழாவை முன்னிட்டு பழனியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ஒருவழிப்பாதைக்கான ஏற்பாடுகளை காவல்துறை மற்றும் நகராட்சி நிா்வாகம் செய்து வருகிறது. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மலைக்கோயிலில் வியாழக்கிழமை முதல் ஐந்து நாள்களுக்கு தங்கத்தோ் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. நிறைவு நாளான பிப்.11 ஆம் தேதி இரவு தெப்பத்தோ் உலா நடைபெறும்.