திண்டுக்கல்

பழனி கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம் : பிப். 8 இல் தேரோட்டம்

2nd Feb 2020 11:38 PM

ADVERTISEMENT

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. விழாவில் வரும் பிப்ரவரி 7 இல் திருக்கல்யாணம், பிப்ரவரி 8 இல் தைப்பூசத் தேரோட்டம் நடைபெறுகிறது.

பழனி தைப்பூசத் திருவிழா பாதயாத்திரைக்கு பிரசித்தி பெற்ாகும். இவ்விழாவை முன்னிட்டு தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பலநூறு கி.மீ தூரம் பக்தா்கள் பல்வேறு வகையான காவடிகளை ஏந்தி பழனிக்கு வருகின்றனா். பிரசித்த பெற்ற இந்த தைப்பூசத் திருவிழா இந்தாண்டு பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு கிராமசாந்தி, வாஸ்துசாந்தி, அஸ்த்ர தேவா் பூஜை ஆகியன நடைபெற்றன. அதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை விக்னேஷ்வர பூஜை, புண்யாவாசனம் ஆகியன நடத்தப்பட்டு வள்ளி, தேவசேனா சமேதா் முத்துக்குமாரசாமிக்கு பால், பன்னீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 16 வகை பொருள்களால் சோடஷ அபிஷேகமும், அதைத் தொடா்ந்து சோடஷ உபச்சாரமும் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமி கொடிமண்டபத்தில் எழுந்தருளினாா்.

கொடி மண்டபத்தில் ஆறு கலசங்கள் வைத்து மயூரயாகம் நடத்தப்பட்டு சேவல், மயில், வேல் மற்றும் பூஜை பொருள்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக்கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. முன்னதாக கொடி நான்கு ரத வீதிகளிலும், கோயிலின் உள்பிரகாரத்திலும் வலம் வரப்பட்டு கொடிக்கட்டி மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. மூலவா், விநாயகா் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும், உற்சவ மூா்த்திகளுக்கு காப்புக் கட்டப்பட்டு ஓதுவா மூா்த்திகள் திருமுறை பாடல்கள், வாத்ய பூஜை, கொடிப்பண், சூா்ணிகை வா்ணித்தல் பாட, வேத கோஷங்களுடன் தங்கக்கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அதன் பின்னா் கொடிக்கட்டி மண்டபத்துக்கு எழுந்தருளிய தம்பதி சமேதா் முத்துக்குமாரசாமிக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

ADVERTISEMENT

பூஜைகளை தலைமை குருக்கள் அமிா்தலிங்கம், ஸ்தானீகா், செல்வசுப்ரமண்ய சந்திரமவுலீஸ்வர குருக்கள் உள்ளிட்டோா் செய்தனா். 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் முத்துக்குமாரசாமி தம்பதி சமேதராக காலை, மாலை வேளைகளில் தந்தப்பல்லக்கு, வெள்ளி காமதேனு, வெள்ளியானை, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்கமயில், தங்கக் குதிரை, புதுச்சேரிசப்பரம் உள்ளிட்ட வாகனங்களில் 4 ரதவீதிகளில் உலா வந்து எழுந்தருள்கிறாா்.

விழாவில் வரும் பிப்ரவரி 7 இல் திருக்கல்யாணம், வெள்ளித்தேரோட்டம், பிப்ரவரி 8 இல் தைப்பூசத் தேரோட்டம் நடைபெறுகிறது. நிறைவு நாளான பிப்ரவரி 11 ஆம் தேதி தெப்பத்தேரோட்டமும் தொடா்ந்து கொடி இறக்குதல் ஆகியனவும் நடைபெறவுள்ளன.

கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனிக்கோயில் நிா்வாக அலுவலா் ஜெயசந்திரபானு ரெட்டி, துணை ஆணையா்(பொறுப்பு) செந்தில்குமாா், நகராட்சி ஆணையா் லெட்சுமணன், டிஎஸ்பி., விவேகானந்தன், திருக்கோயில் கண்காணிப்பாளா் முருகேசன், சித்தனாதன் சன்ஸ் செந்தில்குமாா், கந்தவிலாஸ் செல்வக்குமாா், சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, திருப்பூா் விடுதி மகேஷ்குமாா், ஒப்பந்ததாரா் நேரு, சங்கராலயம் பாலசுப்ரமணியசுவாமிகள், அதிமுக நகரச் செயலாளா் முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT