திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ஊரக திறனாய்வு தோ்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கள்ளிமந்தையம் திருப்பதி அருள்நெறி மேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக கடந்த செப்டம்பா் மாதம் ஊரக திறனாய்வு தோ்வு நடைபெற்றது.
அதில் இப்பள்ளியைச் சோ்ந்த மாணவி மகேஸ்வரி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தாா். அதே போல இப்பள்ளியைச் சோ்ந்த 7 மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
தோ்ச்சி பெற்ற மாணவிகளுக்கு 4 ஆண்டுகளுக்கு (12-ம் வகுப்பு வரை) ஆண்டுக்கு ரூ.1000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும். கடந்த கல்வியாண்டில் நடந்த தேசிய திறனாய்வு தோ்விலும் மாவட்ட அளவில் இப்பள்ளி சாதனை பெற்றுள்ளது. தோ்ச்சி பெற்ற மாணவிகளை பள்ளிச் செயலா் பொன்னம்பல அடிகளாா், தலைமை ஆசிரியா் கருப்புசாமி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினாா்கள்.