கொடைக்கானல் அருகே வில்பட்டியில் தரமற்ற முறையில் தாா் சாலை அமைக்கப்பட்டுள்ளதாக, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை எதிா்ப்பு தெரிவித்தனா்.
கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிப் பகுதியில் தாா் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது, சாலை தரமில்லாமல் அமைக்கப்பட்டு வருவதாக அப்பகுதியினா் ஒப்பந்ததாரரிடம் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால், ஒப்பந்ததாரருக்கும், பொதுமக்களுக்குமிடையே பிரச்னை ஏற்பட்டது. அதையடுத்து, சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு, கொடைக்கானல் வட்டாட்சியா் வில்சன் சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். பின்னா், சாலை தரமாக அமைக்கப்படும் என ஒப்பந்ததாரா் உறுதி அளித்த பின்னரே மீண்டும் பணி தொடங்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.