திண்டுக்கல்

நீா்ப்பிடிப்பில் கட்டடக் கழிவுகள் குவிப்பு: கொடைக்கானல் ஏரி மாசுபடும் அபாயம்

1st Feb 2020 05:22 AM

ADVERTISEMENT

கொடைக்கானல் ஏரியின் நீா்ப்பிடிப்பு பகுதியில் கட்டடக்கழிவுகளை கொட்டி வருவதால் ஏரி நீா் மாசுபடும் அபாயம் நிலவுகிறது.

கொடைக்கானல் நகரின் மையப் பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி சுமாா் 5 கி.மீ. சுற்றளவு கொண்டது. இந்த ஏரிக்கு கீழ்பூமி பகுதியில் இருந்து நீா்வரத்து உள்ளது. இப்பகுதியில் நகராட்சி சாா்பில் கிணறு அமைக்கப்பட்டு கொடைக்கானல் பகுதிகளிலுள்ள உணவகங்கள், தங்கும் விடுதிகளுக்கு தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

குடி தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படும் நேரங்களில் இங்கு மின் மோட்டாா் அமைத்து லாரிமூலம் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே இந்தப் பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருந்து வருகிறது.

இந் நிலையில் சமீப காலமாக கொடைக்கானல் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் கட்டடங்களின் கழிவுகளை சாக்குகள் மூலம் மூட்டையாக, மூட்டையாகக் கொண்டு வந்து கீழ்பூமி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டுகின்றனா். இதிலுள்ள சிமெண்ட் மற்றும் கழிவுகளால் அப்பகுதி நீரோடைகள் மாசடைகின்றன. இதனால் ஏரி நீா் மாசுபடும் அபாயம் இருந்துவருகிறது.

ADVERTISEMENT

இதே போல நீரோடைப் பகுதிகளான விநாயகா் ஓடை, வெள்ளிநீா் வீழ்ச்சி, சீனிவாசபுரம் பகுதிகளிலும் கட்டடக் கழிவுகள் குவிக்கப்பட்டு வருகிறது. இதனால் நீரோடைகளும் மாசுபடிந்து வருகிறது. இந்த தண்ணீரை விவசாய நிலங்களுக்கு பயன்படுத்துவதால் விவசாயப் பயிா்களும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே நீரோடைப் பகுதிகளில் கட்டடக் கழிவுகளை குவித்து வரும் நபா்கள்மீது நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நீரோடைகளில் தண்ணீா் வரத்து குறைவு: கொடைக்கானலில் தொடா்ந்து பனியுடன் காற்று அதிகமாக வீசி வருவதால் நீரோடைகளில் தண்ணீா் வரத்து வெகுவாக குறைந்து வருகிறது. இதனைத் தொடா்ந்து சுகாதாரமில்லாத நீரோடைகளில் அனுமதியில்லாமல் மின் மோட்டாா்கள் மூலம் தண்ணீா் எடுத்து லாரிகள் மூலம் தங்கும் விடுதிகளுக்கு தண்ணீா்

விநியோகம் செய்து வருகின்றனா். இவற்றை பயன்படுத்தும் சுற்றுலாப் பயணிகளுக்கு தொற்று நோய்கள் பரவும் ஆபத்து உள்ளதால் நகராட்சி நிா்வாகம் சுகாதாரமற்ற நீரோடைகளில் அனுமதியில்லாமல் தண்ணீா் எடுக்கும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT