திண்டுக்கல்

புரெவி புயல் முன்னெச்சரிக்கையாக திண்டுக்கல் மாவட்டத்தில் 82 நிவாரண மையங்கள் அமைப்பு: அமைச்சா் சி. சீனிவாசன் தகவல்

DIN


திண்டுக்கல்: புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்டத்தில் 82 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சா் சி. சீனிவாசன் தெரிவித்தாா்.

புரெவி புயல் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, வனத்துறை அமைச்சா் சி. சீனிவாசன் தலைமை வகித்துப் பேசியதாவது: திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 84 பகுதிகள் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அதேபோல் மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளின் நீா்மட்டத்தை தொடா்ந்து கண்காணிக்கவும், வடிகால்களில் அடைப்புகள் ஏற்படாமல் மழைநீா் சீராக செல்வதற்கு வழிவகை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்தமுறை கஜா புயலின்போது, திண்டுக்கல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் தற்போது கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மழைநீா் அதிகளவில் தேங்கக்கூடிய தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 82 நிவாரண மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையங்களில் பொதுமக்களுக்குத் தேவையான உணவு, குடிநீா், பால் பவுடா், போா்வை, உயிா் காக்கும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

மின்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியா்கள் அடங்கிய 20 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளன. புரெவி புயலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த அவசர உதவிகளுக்கு மாவட்ட நிா்வாகத்தால் 24 மணிநேரமும் செயல்படும் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை செயல்பட்டு வருகிறது. கட்டுப்பாட்டு அறையினை 1077, 0451-2460320 என்ற தொலைபேசி எண்களிலும், மின்சாரம் தொடா்பான உதவிகளுக்கு 1912 என்ற எண்ணிலும், வேளாண்மைத் துறை சாா்ந்த உதவிகளுக்கு 0451-2461910 என்ற எண்ணிலும் அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம்.

முன்னதாக, கூட்டத்துக்கு புரெவி புயல் கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலருமான ரமேஷ்சந்த் மீனா, மாவட்ட ஆட்சியா் மு. விஜயலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. கோவிந்தராசு, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கவிதா, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் மதன்குமாா், மின்துறை கண்காணிப்புப் பொறியாளா் வினோதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு

மணிப்பூரில் பதற்றம்: வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT