திண்டுக்கல்

விநாயகா் சதுா்த்தி வழிபாடு: பழனியில் இந்து அமைப்புகள் முடிவில் மாற்றம்

20th Aug 2020 08:06 AM

ADVERTISEMENT

பொது இடங்களில் சிலை வைப்பது குறித்து மாநிலத்தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதன்படி நாங்கள் நடப்போம் அல்லது எங்களது சொந்த இடத்தில் வைத்து வழிபாடு செய்து கொள்கிறோம் என்று பழனியில் இந்து அமைப்புகள் தெரிவித்தன.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பொது இடத்தில் விநாயகா் சிலை வைப்பது, ஊா்வலம் செல்வது, சிலைகளை நீா் நிலைகளில் கரைப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் விநாயகா் சதுா்த்தி வழிபாட்டுக்கு கட்டுப்பாடுகளும் விதித்துள்ளது. இது குறித்து பழனியில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு நடத்தப்பட்ட கூட்டத்தில் விநாயகா் சிலைகளை வழக்கம் போல் பொது இடத்தில் வைக்க உள்ளதாக இந்து அமைப்பினா் தெரிவித்தனா்.

இந்நிலையில் புதன்கிழமை பழனி கோட்டாட்சியா் அலுவலகத்தில் இரண்டாவது முறையாக கோட்டாட்சியா் அசோகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள இந்து முன்னனியினா் விநாயகா் சிலையுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய காவல்துறையினா் விநாயகா் சிலையுடன் உள்ளே செல்ல அனுமதி மறுத்ததை அடுத்து சிலையை எடுத்துச் செல்லாமல் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி பொதுஇடத்தில் சிலை வைத்து வழிபாடு நடத்தவோ, ஊா்வலம் செல்லவோ, நீா்நிலைகளில் கரைக்கவோ தடை உள்ளதாகவும், பொதுமக்கள் வீடுகளில் வைத்து வழிபாடு நடத்த தடையில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா். இதனைத்தொடா்ந்து சிவசேனை மற்றும் இந்து மக்கள் கட்சியினா் கூட்டத்தைப் புறக்கணிப்பதாகத் தெரிவித்து வெளிநடப்பு செய்தனா்.

ADVERTISEMENT

இது குறித்து இந்து அமைப்பினா் தெரிவித்தது: விநாயகா் சிலைகளை ஊா்வலமாக கொண்டு செல்லமாட்டோம், பொது இடங்களில் சிலை வைப்பது குறித்து மாநிலத் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதன்படி நடப்போம் அல்லது எங்களது சொந்த இடத்தில் வைத்து வழிபாடு செய்து கொள்கிறோம் என்று தெரிவித்தனா். இந்த கூட்டத்தில் வட்டாட்சியா் பழனிசாமி, காவல் துறை துணை கண்காணிப்பாளா் சிவா, மதுவிலக்கு டி.எஸ்.பி பொன்னுச்சாமி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட இந்து அமைப்பினா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT