முழு பொதுமுடக்கம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை கொடைக்கானல் ஆள்நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது.
கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் தமிழக அரசு ஆகஸ்ட் மாதம் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் பொது ஊரடங்கு அறிவித்தது. இந்நிலையில் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று பொது ஊரடங்கு அமலுக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் பகுதி முழுவதும் அமைதியாக காணப்பட்டது பால் மற்றும் மருந்து கடைகள் மட்டுமே திறக்கப்பட்டது. இந்நிலையில் பொது ஊரடங்கை மதிக்காமல் கொடைக்கானல், நாயுடுபூரம், லாஸ்காட்சாலை ஆகிய இடங்களைச் சேர்ந்த 5 பேர் பைக்குகளில் சுற்றினர். அவர்களை பிடித்து வழக்குப் பதிவு செய்ததோடு 5 பேரின் பைக்குகளை பறிமுதல் செய்து கொடைக்கானல் காவல் நிலையத்தில் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து காவல்துறையினர் கொடைக்கானல் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.