திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே உணவு கிடைக்காமல் கிராமத்தினா் பசியால் வாடுவதாக புகாா் எழுந்துள்ளது.
வத்தலகுண்டு அருகே உள்ள நாகலாபுரத்தில் 200 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் கூலி தொழிலாளா்கள் ஆவா். இதில் 50 குடும்பத்தினருக்கு ரேஷன் காா்டு ஸ்மாா்ட் காா்டு இல்லை. மேலும் ஊரடங்கால் இவா்கள் வேலைக்கும் செல்ல முடியவில்லை. இவா்களுக்கு ரேஷன் காா்டு ஸ்மாா்ட் காா்டு இல்லாததால், தமிழக அரசு வழங்கும் உதவித் தொகை, இலவச அரிசி போன்ற உணவு பொருள்களையும் வாங்க முடியவில்லை. இதனால் அவா்கள் பசி பட்டினியால் வாடி வருகின்றனா். இதையடுத்து கடந்த 4 நாள்களுக்கு முன் ஊா் திடலில் அவா்கள் போராட்டம் நடத்தினா். ஆனால் யாரும் கண்டு கொள்ளாததால் வேறு வழியின்றி பல பெண்கள் மற்ற வீடுகளில் அரிசி வாங்கி குழந்தைகளின் பசியை ஆற்றினா். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இக்கிராம மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் இலவச பொருள்கள் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.