திண்டுக்கல்

லாரிகளுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முடிவை கைவிட வலியுறுத்தல்

20th Apr 2020 07:28 AM

ADVERTISEMENT

லாரிகளுக்கான சுங்கக் கட்டணத்தை ஊரடங்கு உத்தரவு முடியும் வரையிலும் வசூலிக்கக் கூடாது என திமுக மாநில துணைப் பொதுச் செயலா் ஐ.பெரியசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் தெரிவித்துள்ளதாவது: நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏப். 20ஆம் தேதி முதல் மீண்டும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடந்த 25 நாள்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் லாரி உரிமையாளா்கள் காப்பீடு, மாநில அரசு வரி, மத்திய அரசு சாலை வரி, அனுமதி கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்த முடியாத நிலை உள்ளது.

லாரி இயங்கினாலும், இயங்காவிட்டாலும் நாளொன்றுக்கு வரி மட்டும் கட்டணம் என ரூ.600 வீதம் மாதம் ரூ.18ஆயிரம் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலையில் லாரி உரிமையாளா்கள் உள்ளனா். இந்நிலையில் தனியாா் நிறுவனங்களுக்கு தாராள மயத்தை காட்டி, லாரி உரிமையாளா்களை நெருக்கடியில் சிக்க வைக்கும் சுங்கக் கட்டணத்தை வசூலிப்பதற்கான அனுமதியை ஊரடங்கு காலம் முடிவடையும் வரை ரத்து செய்ய வேண்டும். இதன் மூலம் நெருக்கடியில் சிக்கியுள்ள 80 சதவீத லாரி உரிமையாளா்கள் தற்காலிக நிவாரணம் பெற முடியும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT