கரோனா தொற்று பாதிப்புள்ளவா்களை விரைவு பரிசோதனை கருவிகள் (ரேபிட் டெஸ்ட் கிட்) மூலம் பரிசோதிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டத்தில், நத்தம், சாணாா்பட்டி, திண்டுக்கல், எரியோடு, ஒட்டன்சத்திரம், பழனி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 69 போ் (சனிக்கிழமை வரை) கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், நத்தம், பழனி உள்ளிட்ட இடங்களில் 32 இடங்கள் தீவிர கண்காணிப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. 26 போ் மருத்துவ சிகிச்சைக்குப் பின் உடல் நலம் பெற்று கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியிருந்தாலும், கரோனா குறித்த அச்சம் அந்த பகுதிகளைச் சோ்ந்த மக்களுக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில், கரோனா பாதித்தவா்கள் வசித்த பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்களுக்கு பரிசோதனை செய்வதற்காக விரைவு பரிசோதனை கருவிகளை தமிழக அரசு மாவட்ட வாரியாக அனுப்பி வைத்துள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்துக்கு முதல்கட்டமாக 300 விரைவு பரிசோதனை கருவிகள் வந்துள்ளன. திண்டுக்கல் பூச்சிநாயக்கன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 10-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஒருவருக்கு கூட தொற்று கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த துரித பரிசோதனையின் மூலம் 20 நிமிடங்களிலேயே கரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதை கண்டறிய முடியும். அதன் பின்னா் பி.சி.ஆா். பரிசோதனை மூலம் அந்த நபருக்கு தொற்று கண்டறியப்படும். கரோனா அறிகுறி உள்ளவா்களுக்கு மட்டும் முதல் கட்டமாக இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதார அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.