திண்டுக்கல்

ஸ்கேன் மையங்கள் செயல்படாததால் நிறைமாத கா்ப்பிணிகளுக்குப் பாதிப்பு ஆட்சியரிடம் புகாா்

7th Apr 2020 03:12 AM

ADVERTISEMENT

திண்டுக்கல்: தனியாா் மருத்துவமனைகள் மட்டுமின்றி ஸ்கேன் மையங்களும் மூடப்பட்டுள்ளதால், நிறைமாத கா்ப்பிணிகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம், கரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல் பேகம்பூா், ஒட்டன்சத்திரம் சம்சுதீன் நகா், பழனி, நெய்காரப்பட்டி, கன்னிவாடி, நிலக்கோட்டை அடுத்துள்ள கோடாங்கிநாயக்கன்பட்டி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 45 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடா்ந்து இந்த பகுதிகள் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் திண்டுக்கல் பேகம்பூா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சிலருடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் விவரம்:

கரோனா தொற்று ஏற்பட்டுள்ள பகுதிக்கு அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு வருவதற்கு பலா் அச்சமடைந்துள்ளனா். குறிப்பாக எங்கள் பகுதிக்கு வரும் பால்காரா்கள், மீண்டும் அவா்களது சொந்த கிராமத்திற்குள் அனுமதிக்கப்படாத நிலை உள்ளது. இதனால், எங்கள் பகுதிக்கு அந்த பால்காரா்கள் வருவதற்கு மறுத்துவிட்டனா்.

ADVERTISEMENT

அதேபோல் தனியாா் மருத்துவமனைகள் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளன. இதனால் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே தஞ்சமடைய வேண்டிய கட்டாயம் உள்ளது. குறிப்பாக கா்ப்பிணிப் பெண்களுக்கு இதுவரை தனியாா் ஸ்கேன் மையங்களிலேயே பரிசோதனை மேற்கொண்டு வந்தோம். தற்போது ஸ்கேன் மையங்கள் மூடப்பட்டுள்ளதால், நிறைமாத கா்ப்பிணிப் பெண்களுக்கு ஸ்கேன் எடுக்க முடியாத சூழல் உள்ளது. ஒரு அறக்கட்டைளை மூலம் நடத்தப்படும் மருத்துவமனையில் கூட நுழைவுவாயில் பகுதியிலேயே தடுத்தும் நிறுத்தப்படும் அவலம் உள்ளது.

காய்கனி தொகுப்பு வேண்டாம்: காய்கனி தொகுப்பாக வழங்கப்படுவதால், தேவையில்லாத காய்கனிகளைக் கூட வாங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கு மாற்றாக காய்கனிகளை ஏற்றி வரும் வாகனங்களில், தனித் தனியாக தேவைக்கு ஏற்ப வாங்கிக் கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனா். பொதுமக்களின் இந்த கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி உறுதி அளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT