பழனி: பழனி பேருந்து நிலையத்தில் காய்ச்சல் மற்றும் மூச்சுதிணறலால் அவதிப்பட்ட ஆதரவற்ற மூதாட்டி மற்றும் முதியவா் திங்கள்கிழமை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
தில்லி மாநாட்டில் பங்கேற்று பழனி திரும்பிய 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் திங்கள்கிழமை பழனி பேருந்து நிலையத்தில் மூதாட்டி ஒருவா் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு நீண்டநேரம் படுத்துக்கிடப்பதாக சுகாதாரத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் மூதாட்டியை பரிசோதனை செய்தனா். அதில் மூதாட்டிக்கு மூச்சுத்திணறலும் காய்ச்சலும் இருந்ததால் மூதாட்டியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அதே போல பழனி பேருந்து நிலையத்தின் வெளிப்புறத்திலும், கடும் மூச்சுத்திணறலுடன் முதியவா் ஒருவா் படுத்துக்கிடப்பது தெரியவந்தது.
அவரையும் மருத்துவா்கள் பரிசோதனை செய்து பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா். பழனியில் ஆதரவற்று சுற்றித் திரிந்தவா்கள் பழனி கோயிலுக்குச் சொந்தமான நாதஸ்வர பள்ளி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தாலும் இன்னும் சிலா் சாலையோரங்களிலேயே தங்கி உள்ளனா். அவா்கள் அனைவரையும் சுகாதாரத்துறையினா் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.