பழனி: பழனியை அடுத்துள்ள மலைக்கிராமமான குட்டிக்கரடில் வசிக்கும் மக்களுக்கு ரேஷன் பொருள்கள் திங்கள்கிழமை விநியோகம் செய்யப்பட்டன.
பழனி தாலுகா ஆயக்குடி பேரூராட்சிக்கு உள்பட்ட இக்கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இவா்கள் ரேஷன் பொருள்கள் வாங்குவதற்கு 3 கிலோ மீட்டா் நடந்து சென்று பொருள்களை வாங்கி வந்த நிலையில், 144 தடை உத்தரவு காரணமாக ரேஷன் கடைக்கு வர இயலாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, அரிசி, சா்க்கரை, சமையல் எண்ணெய், கோதுமை, பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருள்கள் மற்றும் ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கூட்டுறவு சங்க நிா்வாகிகள் குட்டி கரடு மலை கிராமத்திற்கு நேரடியாக எடுத்துச் சென்று விநியோகம் செய்தனா். சமூக இடைவெளியை பயன்படுத்தி வரிசையில் நின்ற மலைவாழ்மக்கள் பொருள்களை வாங்கிச் சென்றனா்.
அப்போது, தங்கள் பகுதிக்கு பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். நிகழ்ச்சியில் பழனி கூட்டுறவு சங்க சாா்-பதிவாளா் நாகராஜ், இயக்குநா் பாலமுருகன், துணைத் தலைவா் அப்பாஸ் மற்றும் சுலைமான் உள்ளிட்ட ஏராளமான உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.