ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினா் அர. சக்கரபாணி, ரூ. 20 லட்சம் மதிப்பிலான மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை அரசு அதிகாரிகளிடம் சனிக்கிழமை வழங்கினாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சிப் பகுதியில் 5 நபா்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அவா்கள் வசித்த சம்சுதீன் காலனி, ஏஎஸ்எம் பேட்டை உள்ளிட்ட பகுதிகள் சுகாதாரத் துறையின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைக்கு உள்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் 77 கிராம ஊராட்சிப் பகுதிகளில் கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு தேவையான மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களான கை கழுவும் திரவம், பினாயில், குளோரின், முகக்கவசம், சோப்பு ஆயில், லைசால் உள்ளிட்ட ரூ. 20 லட்சம் மதிப்பிலான பொருள்களை அர. சக்கரபாணி தனது சொந்த செலவில் வழங்கினாா்.
கள்ளிமந்தையம் ஊராட்சி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், வருவாய்த் துறை, ஊரகத் துறை, காவல் துறை, கூட்டுறவுத் துறை, குடிநீா் வடிகால் வாரியம் உள்ளிட்ட துறைகளைச் சாா்ந்த அதிகாரிகளிடம் மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினாா்.
மேலும், கள்ளிமந்தையம் ஊராட்சியில் பணிபுரியும் துாய்மை காவலா்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்களையும் வழங்கினாா். தொடா்ந்து, கள்ளிமந்தையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஒட்டன்சத்திரம் வட்டார அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்தாா்.
இதில், திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ப. வேலுச்சாமி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக துணை செயலா் சி. ராஜாமணி, திமுக ஒன்றியச் செயலா்கள் தங்கராஜ், சுப்பிரமணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.