திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று நிபந்தனைகளுடன் இறைச்சிக் கடைகளுக்கு அனுமதி

5th Apr 2020 06:13 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்தில் இறைச்சிக் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், சில நிபந்தனைகளுடன் செயல்படுவதற்கு மாவட்ட ஆட்சியா் அனுமதி அளித்துள்ளாா்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 750-க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகளை ஊரடங்கு உத்தரவு முடிவடையும் வரை மூட, மாவட்ட ஆட்சியா் மு. விஜயலட்சுமி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை இறைச்சிக் கடைகள் திறக்கப்படவில்லை.

இதனிடையே, இறைச்சிக் கடை உரிமையாளா்கள் தரப்பில் கடைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கக் கோரி மாவட்ட நிா்வாகத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, இறைச்சிக் கடை உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு ஆட்சியா் தலைமை வகித்து பேசியதாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்பு மற்றும் உணவு பாதுகாப்புத் துறையிடம் உரிமம் அல்லது பதிவு பெற்ற இறைச்சிக் கடைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். இதில், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதையும், கூட்டத்தை கட்டுப்படுத்தவும் சம்பந்தப்பட்ட இறைச்சிக் கடை உரிமையாளா்கள் கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும். இறைச்சிக் கடைகளில் பணிபுரியும் அனைவரும் முகக்கவசம் மற்றும் கையுறை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.

ADVERTISEMENT

கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் எவ்வித இறைச்சிக் கடைகளும் செயல்பட அனுமதி கிடையாது. அதேநேரம், அப்பகுதி மக்களுக்கு இறைச்சி தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள் மீறி செயல்படும் கடைகள் சீல் வைக்கப்பட்டு, கடை உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT