திண்டுக்கல்

சமூக இடைவெளியை உறுதிப்படுத்தும் பொதுமக்களுக்கு சிறப்பு பரிசு: அமைச்சா்

5th Apr 2020 06:11 AM

ADVERTISEMENT

சமூக இடைவெளியை உறுதிப்படுத்தும் பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என, வனத் துறை அமைச்சா் சி. சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 43 போ் கரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன் காரணமாக, பொதுமக்களிடையே சமூக இடைவெளியை தீவிரப்படுத்தும் நோக்கில், மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் வெளியிடங்களுக்கு வருவதைத் தவிா்க்கும் வகையில், மளிகைப் பொருள்கள் மற்றும் காய்கனி தொகுப்புகளை வீடுகளுக்கே கொண்டு செல்லும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மளிகைப் பொருள்கள் தொகுப்பு வழங்கும் பணியை, மாவட்ட ஆட்சியா் மு. விஜயலட்சுமி தலைமையில், அமைச்சா் சி. சீனிவாசன் சனிக்கிழமை தொடக்கி வைத்து, செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

மளிகைப் பொருள்கள் மற்றும் காய்கனி வாங்குவதற்காக பொதுமக்கள் வெளியிடங்களுக்கு வருவதைத் தடுக்கும் வகையில், இந்த சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில், ரூ.2000 மதிப்பிலான மளிகைப் பொருள்கள் வாங்குவோருக்கு பரிசு கூப்பன் வழங்கப்படும். இதற்கு, ஏப்ரல் மாத இறுதியில் குலுக்கல் நடைபெறும். அதில், 1 நபருக்கு முதல் பரிசாக குளிா்சாதனப் பெட்டி, 2 நபா்களுக்கு 2ஆம் பரிசாக பீரோ, 3 நபா்களுக்கு 3ஆம் பரிசாக பிரஷா் குக்கா், 108 நபா்களுக்கு சிறப்பு பரிசாக சேலை வழங்கப்படும்.

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நியாய விலைக் கடைகளில் 7ஆம் தேதி முதல் டோக்கன் வழங்கப்பட்ட குறிப்பிட்ட நபா்களுக்கு மட்டுமே அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரா்களும் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாளிலேயே வந்து பொருள்களை பெறவேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் வி. மருதராஜ், மாநகராட்சி ஆணையா் செந்தில்முருகன், உணவுப் பாதுகாப்பு அலுவலா் செல்வம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT