திண்டுக்கல்

கொடைக்கானலில் திரைப்பட படப்பிடிப்பால் போக்குவரத்து பாதிப்பு

22nd Sep 2019 12:39 AM

ADVERTISEMENT


கொடைக்கானலில் சனிக்கிழமை நடைபெற்ற படப்பிடிப்பால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள், பொது மக்கள் அவதியடைந்தனர்.
கொடைக்கானல் பகுதிகளான பெருமாள்மலை, பழனிபிரிவு, அப்சர்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாக நடிகை கீர்த்திசுரேஷ் நடிக்கும் திரைப்படத்துக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நாயகியை மையமாக  வைத்து எடுக்கப்படும் இப்படத்தை இயக்குநர் ஈஸ்வர் இயக்கி வருகிறார். போக்குவரத்து அதிகமாக உள்ள இடங்களிலும், நகர்ப் பகுதிகளிலும் படக்குழுவினர் படம் எடுத்து வருகின்றனர்.  
ஏற்கெனவே பெருமாள்மலைப் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக படக்காட்சிகள் படமாக்கப்பட்டன. இதனால் அப் பகுதிகளில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும், பல்வேறு பணிகளுக்குச் செல்பவர்களும் பாதிக்கப்பட்டதாக அப்பகுதியினர் அதிருப்தி தெரிவித்தனர். இந்நிலையில்  போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
கொடைக்கானல் நகர்ப் பகுதிகளில் திரைப்படம் எடுப்பதற்கு நகராட்சி, காவல்துறை உள்ளிட்டவர்களின் அனுமதி பெற்று தகுந்த பாதுகாப்போடுதான் படப்பிடிப்பு நடைபெற வேண்டும். ஆனால் எந்தவிதமான பாதுகாப்பின்றி, நகரின் மையப்ப பகுதியான ஏரிக்குச் செல்லும் செவண்ரோடு சாலையில் செயற்கை அரங்குகள் அமைக்கப்பட்டு படம் பிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அப் பகுதிகளில் செல்லும் சுற்றுலாப் பயணிகள், பொது மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கும், படக்குழுவினருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் படக்குழுவினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி காட்சிகளை விரைவாக படம் பிடித்து முடிக்கும்படி வலியுறுத்தினர்.
இது குறித்து கொடைக்கானல் நகராட்சி வருவாய் ஆய்வாளர் சரவணன் கூறியது: கொடைக்கானல் நகர்ப் பகுதிகளில் 2 நாள்கள் மட்டும் போக்குவரத்துக்கு இடையூறின்றி படப்பிடிப்பு நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் சாலைகளை மறைத்து அரங்குகள் அமைப்பதற்கும், கூடுதலாக படக்காட்சிகள் எடுப்பதற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இனிமேல் இதுபோன்ற பிரச்னைகள் எழாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT