திண்டுக்கல்

கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு செப்.24 இல் பதிவு மூப்பு பட்டியல் பரிந்துரை

22nd Sep 2019 12:39 AM

ADVERTISEMENT


கிராம சுகாதார செவிலியர் காலிப் பணியிடங்களுக்குத் தகுதி வாய்ந்த பெண் பதிவுதாரர்கள் மட்டும் மாநில அளவிலான உத்தேச பதிவு மூப்புப்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மைய உதவி இயக்குநர் பிரபாவதி தெரிவித்துள்ளது: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 1,234 கிராம சுகாதார செவிலியர் காலிப் பணியிடங்களுக்குத் தகுதி வாய்ந்த பெண் பதிவுதாரர்கள் மட்டும் மாநில அளவிலான உத்தேச பதிவு மூப்புப்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட உள்ளனர். 
  10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குநரால் வழங்கப்பட்ட 18 மாத கால பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது பிளஸ் 2 தேர்ச்சியுடன் 2 ஆண்டுகளுக்கான பல்நோக்கு சுகாதாரப் பணியாளருக்கான பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு செவிலியர் மற்றும் பேறுகால மருத்துவப் பணிக்கான கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். 
மருத்துவப்பணிக்கான கவுன்சிலில் பதிவு செய்யாத மனுதாரர்களை பரிந்துரைக்க இயலாது. 
ஜூலை 1 நிலவரப்படி முற்பட்ட வகுப்பினர் நீங்கலாக, இதர அனைத்து வகுப்பினரும் 57 வயதுக்குள் இருக்க வேண்டும்.  முற்பட்ட வகுப்பினர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். கடந்த 18 ஆம் தேதி முடிய பதிவு செய்துள்ள மற்றும் பதிவை தற்போது வரை புதுப்பித்துள்ள, முன்னுரிமையுள்ள மற்றும் முன்னுரிமையற்ற பிரிவைச் சார்ந்த  பெண் பதிவுதாரர்கள் மட்டுமே உத்தேச பதிவுமூப்பிற்கு கருதப்படுவார்கள். இந்த தகுதிகளைக் கொண்ட பதிவுதாரர்கள், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், முன்னுரிமைப் பதிவு தொடர்பான சான்று, சாதிச்சான்று, இணையதள வழி பதிவிறக்கம் செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை ஆகியவற்றுடன் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை (செப்.24) காலை 11 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும். இதற்குப் பின்னர் பெறப்படும் பரிந்துரைத்தல் தொடர்பான கோரிக்கைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாது.
 கிராம சுகாதார செவிலியருக்கான பயிற்சியை, அரசு பயிற்சி நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது இந்தியன் நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களிலோ பயின்று, தேர்ச்சி பெற்று பதிவு செய்த பதிவுதாரர்கள் மட்டுமே தகுதியானவராக கருதப்படுவார்கள்.  
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநரை நேரில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT