திண்டுக்கல்

ஊட்டச்சத்து இயக்க விழிப்புணர்வு: திண்டுக்கல், தேனியில் இன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம்

13th Sep 2019 08:45 AM

ADVERTISEMENT

ஊட்டச்சத்து இயக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வெள்ளிக்கிழமை சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.
      இது தொடர்பாக, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் தனிநபர் சுகாதாரத்தினை மேம்படுத்தும் வகையில், 2019 செப்டம்பர் மாதத்தை தேசிய ஊட்டச்சத்து மாதமாகக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஊட்டச்சத்து இயக்கம் குறித்த சிறப்பு கிராமசபைக் கூட்டம், தனி அலுவலர் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் செப்டம்பர் 13ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. 
      இந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் தனிநபர் சுகாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் உறுதிமொழியேற்று, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 
 எனவே, ஊராட்சிப் பகுதியில் உள்ள அனைவரும் இக் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம்
 திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வுக் கூட்டத்துக்கு, நகராட்சி ஆணையர் பா. தேவிகா தலைமை வகித்தார். உணவுப் பாதுகாப்பு அலுவலர் மோகனரங்கன், மகளிர் சுயஉதவிக்குழு சமுதாய அமைப்பாளர் பாஸ்கர சேதுபதி, வட்டார ஒருங்கிணைப்பாளர் சரண்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.       கூட்டத்தில், கர்ப்பிணி தாய்மார்களும், குழந்தைகளும் சத்தான உணவு வகைகளை உட்கொள்ளவேண்டும். அவர்களுக்கு காய்கறிகள், பழங்கள், தானியங்களாலான ஊட்டச்சத்துமிக்க உணவு வகைகளை அளித்து உறுதிமிக்க குழந்தைகளை உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, உறுதிமிக்க குழந்தைகளை உருவாக்குவது என உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தேனி
     தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு ஊட்டச்சத்து இயக்கம் குறித்த சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. 
      இதில், ஊட்டச் சத்து இயக்கம் சார்பில் தேசிய ஊட்டச் சத்து மாதம் கொண்டாடப்பட்டு வருவது குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஊட்டச் சத்து இயக்கத்தில் பொதுமக்களை பங்கேற்கச் செய்தல், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் கழிப்பறை வசதியை உறுதி செய்தல், கை கழுவும் பழக்கத்தின் முக்கியத்துவம்  குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், திடக் கழிவு மேலாண்மைத் திட்டப் பணியாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களின் பணிகளை ஊட்டச் சத்து இயக்கத்துக்கு பயன்படுத்திக்கொள்வது ஆகியன குறித்து சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். 
     ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவ் அறிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT