திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே பொதுப்பாதை திடீர் அடைப்பு: அதிகாரிகள் பேச்சுவார்த்தை

10th Sep 2019 09:07 AM

ADVERTISEMENT

கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை பகுதியில் பொது மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை தனி நபர்கள் அடைத்ததைத் தொடர்ந்து திங்கள்கிழமை அப் பகுதிக்குச் சென்று வருவாய்த்துறையினர் ஆய்வு நடத்தினர்.
கொடைக்கானல் அருகே பேத்துப்பாறைப் பகுதியில் பொது வயல் என்ற பகுதியில் பல ஆண்டுகளாக 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அப்பகுதியில் மண்சாலை அமைத்து அவற்றைப் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த சில தொழிலதிபர்கள் அதேப் பகுதியில் நிலங்கள் வாங்கியுள்ளனர். 
கடந்த சில தினங்களுக்கு அவர்கள் பொதுவயல் பகுதியில் குடியிருப்பவர்கள் பயன்படுத்தி வரும் சாலையை மறைத்து கதவு அமைத்துள்ளனர். இதனால் அப் பகுதி மக்கள் பாதைய பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பாதையை அடைத்து வைத்ததற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறையினர் சென்று சாலையை தனி நபர்கள் அடைத்துள்ள இடம் குறித்து திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்யப்படும் என தெரிவித்ததைத் தொடர்ந்து அப் பகுதி மக்கள் சமரசமடைந்தனர்.
இந்நிலையில் கொடைக்கானல் வருவாய்த்துறை ஆய்வாளர் நவநீதன், வில்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுசீந்திரன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று பாதையை ஆய்வு செய்தனர். தற்போது அப் பகுதி மக்கள் வசிக்கும் இடத்திற்குச் செல்வதற்கு மாற்றுப்பாதை அமைத்துக் கொடுத்துள்ளனர்.
இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது: பேத்துப்பாறை பொதுவயல் பகுதியில் பொது மக்கள் பயன்படுத்தி வந்த பாதையில் தனிநபர்கள் சிலர் கதவு அமைத்து வைத்துள்ளனர். அந்த இடம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பொது மக்கள் செல்வதற்கு அதேப் பகுதியில் மாற்றுப் பாதை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. பிரச்சனைக்குரிய இடம் அளக்கப்பட்டு அந்த  இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து விபரம் தெரிவிக்கப்படும் என்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT