திண்டுக்கல்

மணல் கடத்தலை தடுக்க நிலக்கோட்டை  கோட்டாட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

4th Sep 2019 07:23 AM

ADVERTISEMENT

நிலக்கோட்டை, சித்தர்கள்நத்தம் பகுதி வைகை தடுப்பணையில் நடைபெறும் மணல் கடத்தல் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க, நிலக்கோட்டை கோட்டாட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம், ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே  ராமராஜபுரம், சித்தர்கள்நத்தம்  உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். வைகை ஆற்று நீரை விவசாயத்திற்கும், குடிநீருக்கும் நம்பி உள்ளனர்.  சித்தர்கள்நத்தம் பகுதி வைகை ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் வேகமாக வரும் போது அடித்து வரப்பட்ட மணல் அதிகளவு சித்தர்கள்நத்தம்  தடுப்பணையில் தேங்கி உள்ளது.
இந்நிலையில், ஆற்றில் நீர் வரத்து இல்லை என்பதால் சிலர் தடுப்பணையில் தேங்கிய மணலை பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி,  லாரிகளில் சட்ட விரோதமாக திருடிச் செல்கின்றனர். இதனால், அப்பகுதியில் நிலத்தடி நீர்வளம் பாதிக்கப்பட்டு வருகிறது. விவசாய நிலங்கள் பாசனம் பெறுவது பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, நிலக்கோட்டை அருகே உள்ள சித்தர்கள்நத்தம் பகுதி வைகை ஆற்றுத் தடுப்பணையில் சட்டவிரோதமாக மணல் கடத்துவதை தடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர். தாரணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நிலக்கோட்டை  சித்தர்கள்நத்தம் பகுதி வைகை ஆற்றுத் தடுப்பணையில் சட்டவிரோத மணல் திருட்டு தொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க  நிலக்கோட்டை கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT