திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 28 குறுவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிவு: ஆட்சியர் தகவல்

4th Sep 2019 07:21 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்தில் 28 குறுவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 1200 அடிக்கு கீழ் சென்றுவிட்டது என ஆட்சியர் மு.விஜயலட்சுமி தெரிவித்தார்.
 காந்தி கிராம கிராமியப் பல்கலை. வேளாண் அறிவியல் மையம் சார்பில் நீர் மேலாண்மை இயக்கம் தொடர்பான விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பல்கலை. பல்நோக்கு அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் (பொ) எம்.சுந்தரவடிவேலு தலைமை வகித்தார்.
இதில், மாவட்ட ஆட்சியர் எம்.விஜயலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது: மழைநீரை சேமித்து வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதுடன் விவசாயிகள் தங்களின் லாபத்தை பெருக்க புதிய தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 28 குறுவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 1200 அடிக்கும் கீழாக குறைந்துவிட்டது. இந்த பகுதிகளில் 700 அடிக்கு நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தினால் மட்டுமே, எதிர்காலத்தில் விவசாயம் செய்வது சாத்தியம். நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க வேண்டுமெனில் தண்ணீர் சேமிப்புக்கு பொதுமக்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மானாவரி நிலங்களில் நீர் சேமிப்பு முறையினை பின்பற்றியும், நீர் பற்றாக்குறை உள்ள தோட்டங்களில் நீர் மேலாண்மை திட்டங்களான சொட்டு நீர்ப்பாசனம், நிலப் போர்வை ஆகியவற்றின் மூலமாகவும் சாகுபடி செய்தால் மட்டுமே உற்பத்தியை பெருக்க முடியும்  என்றார். 
ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கவிதா பேசுகையில், மரக் கன்றுகள் வளர்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதிலும் வேப்பங்கன்றுகளை அதிக அளவு நடவு செய்தால், மழை மேகங்களை ஈர்த்து, குளிர்வித்து கூடுதல் மழைப் பொழிவு கிடைக்க கூடிய சூழல் உருவாகும் என்றார்.
நிகழ்ச்சியில் பல்கலை. பதிவாளர் வி.பி.ஆர்.சிவகுமார், வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.பாண்டித்துரை, முதுநிலை விஞ்ஞானியும் வேளாண் அறிவியல் மையத்தின் தலைவருமான(பொ) வி.பி.சரவணன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர்(பொ) ஏ.சீனிவாசன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT