திண்டுக்கல்

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க பழனியில் என்சிசி மாணவர்களுக்கு பயிற்சி

4th Sep 2019 07:21 AM

ADVERTISEMENT

பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் 2020-ஆம் ஆண்டு தில்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கான பயிற்சி முகாமில் திங்கள்கிழமை துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது.
14 ஆவது தமிழ்நாடு பட்டாலியன் என்சிசி யின் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் சாஜி தலைமையில் தொடங்கிய இப்பயிற்சி முகாமில் கோவை,  திருச்சி,  நெல்லை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 550 என்சிசி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
 இவர்களுக்கு வரும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் கலந்து கொள்வதற்காக ஆயுதப் பயிற்சி, சமூக விழிப்புணர்வு பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகியவை அளிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக பழனியிலும், அடுத்தகட்டமாக தஞ்சாவூர் அருகே உள்ள வல்லத்திலும், தொடர்ந்து திருச்சியிலும் நடைபெறும். இதனையடுத்து, தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அந்தமான் நிகோபார் ஆகிய இடங்களில் நடைபெறும் பயிற்சியில் பங்கேற்று தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில், தேர்ச்சிபெற்ற 80 மாணவர்கள் வரும் 2020 ஆம் ஆண்டு தில்லியில் நடைபெறவுள்ள குடியரசுதின அணிவகுப்பில் சுமார் 7 கி.மீ. தூரம் நடைபெறும் அணிவகுப்பில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
 திங்கள்கிழமை  சீனியர் மற்றும் ஜூனியர் மாணவ, மாணவியருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு முதல்வர் பிரபாகரன் தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முனைவர் லெப்டினன்ட் பாக்கியராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.  வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட பல்வேறுவகையான நிழல்தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன.
முகாமில் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்படுமென கல்லூரி என்சிசி அதிகாரி லெப்டினன்ட் பாக்கியராஜ் தெரிவித்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT