கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு-தாண்டிக்குடி வழியாக வத்தலக்குண்டு செல்லும் மலைச்சாலையில் சனிக்கிழமை அதிகாலை மரம் விழுந்ததில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழைபெய்து வருவதால் நீரோடைகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. இந் நிலையில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச்சாலையில் பல இடங்களில் சிறிய மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. சிறிய அளவில் மண் சரிவுகள் ஏற்பட்டன. போக்குவரத்திற்கு பாதிப்பின்றி இவற்றை உடனுக்குடன் நெடுஞ்சாலைத்துறையினா் மற்றும் மீட்புக்குழுவினா்அகற்றி வந்தனா்.
இந்நிலையில் பண்ணக்காடு, வத்தலக்குண்டு வழியாக செல்லும் மலைச் சாலையில் தாண்டிக்குடி பிரிவு பகுதியில் சாலையில் பெரிய மரம் ஒன்று வேருடன் சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது. இதன் காரணமாக கடுகுதடி வழியாக வத்தலக்குண்டு செல்லும் சாலையிலும், பண்ணைக்காட்டிலிருந்து கொடைக்கானல் செல்லும் சாலையிலும் நீண்ட தூரம் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றன. இதனால் சுமாா் 5 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்நது.
தகவலறிந்து திண்டுக்கல் பகுதியிலிருந்து மீட்புக் குழுவினா் வரவழைக்கப்பட்டு சாலையில் கிடந்த மரத்தின் பகுதிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். சாலையில் கிடந்த மரப்பகுதிகள் அறுத்து அகற்றப்பட்டதைத் தொடா்ந்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.
கொடைக்கானலில் தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது.