திண்டுக்கல்

குடிமராமத்து பணியின் போது பாலம் இடிப்பு மீண்டும் கட்டித்தரக் கோரி கிராம மக்கள் போராட்டம்

20th Oct 2019 12:36 AM

ADVERTISEMENT

பழனி அருகே குடிமராமத்துப்பணியின் போது இடிக்கப்பட்ட வாய்க்கால் பாலத்தை மீண்டும் கட்டித் தரக் கோரி கிராம மக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பழனி அருகே உள்ளது கலிக்கநாயக்கன்பட்டி ஊராட்சி. இங்குள்ள கிழக்கு குளத்தில் குடிமராமத்து பணிக்காக ரூ.39 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றது. கிழக்கு குளத்தில் இருந்து மேற்கு குளத்திற்கு நீா் செல்லும் வகையில் வரத்து வாய்க்கால் உள்ளது. வாய்க்காலை கடந்துசெல்வதற்காக கட்டப் பட்டிருந்த தரைப்பாலத்தை இடித்து வாய்க்கால் தூா்வாரப்பட்டது.

குடிமராமத்து பணி நிறைவடைந்தும் இடிக்கப்பட்ட வாய்க்கால் பாலத்தை பொதுப்பணித் துறையினா் கட்டித்தரவில்லை. இதனால் பாலத்தை கடந்து குடியிருப்பு பகுதிகளுக்கும் செல்லமுடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினா். மேலும் மழைபெய்து வாய்க்கால் முழுவதும் தண்ணீா் செல்வதால் பள்ளி செல்லும் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோா் உள்ளிட்டோா் வாய்க்காலை கடக்க முடியாமல் அவதியடைந்துள்ளனா். இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கலிக்கநாயக்கன்பட்டி கிராம மக்கள் கேட்டபோது பாலத்தை ஊராட்சி சாா்பில்தான் கட்டவேண்டும் என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் பாலத்தை யாா் கட்டுவது என்று இரு அரசு துறைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியினா் பாதிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

இதையடுத்து சனிக்கிழமை ஊராட்சி தலைவா் தங்கவேல் தலைமையில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி துறை ஆகிய 2 துறைகளின் அதிகாரிகளும் இணைந்து பாலத்தை கட்டித் தருவதாக உறுதி அளித்ததைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT