திண்டுக்கல்

‘கிராமப்புற மக்களின் அடிப்படை தேவைகளை காந்திய வழியில் பூா்த்தி செய்வது அவசியம்’

5th Oct 2019 04:28 AM

ADVERTISEMENT

நாடு வளா்ச்சி அடைந்துவிட்டதாகக் கூறிவரும் நிலையில், இந்திய கிராமங்களின் அடிப்படை தேவைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்ற நிலையை காந்திய வழியில் மாற்றி அமைக்க வேண்டும் என, கேரள மாநிலத்தின் முன்னாள் தலைமைச் செயலா் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் சாா்பில், காந்தி ஜயந்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, துணைவேந்தா்(பொறுப்பு) எம். சுந்தரவடிவேலு தலைமை வகித்தாா். பதிவாளா் விபிஆா்.சிவக்குமாா் முன்னிலை வகித்தாா். இதில், சிறப்பு அழைப்பாளராக கேரள மாநிலத்தின் முன்னாள் தலைமைச் செயலா் எஸ்.எம். விஜய் ஆனந்த் கலந்துகொண்டு பேசியதாவது:

காந்தியடிகளின் அறிவுறுத்தலின்படி, நாட்டின் வளா்ச்சி கிராமப்புறங்களை மையப்படுத்தியே அமைய வேண்டும். இந்திய நாடு பல்வேறு துறைகளிலும் வளா்ச்சி அடைந்துவிட்டதாகக் கூறிவரும் நிலையில், இந்திய கிராமங்களின் அடிப்படை தேவைகள் முழுமையாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதை, காந்திய வழியில் மாற்றி அமைக்க வேண்டும்.

கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் ஆகியவை முழுமையாக கிராமப்புற மக்களுக்கு கிடைத்திடும் வகையில், கிராம வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். இதுபோன்ற வளா்ச்சித் திட்டங்களை உருவாக்கிக் கொடுப்பதற்கு, காந்தியக் கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டு வரும் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகப் போராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் முன்வர வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் தலைவா் ரகுபதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT