ஓய்வு பெறும் நாளில் பணி நீக்க உத்தரவு வழங்குவதை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் நத்தம் வட்டத் தலைவா் ஏ.பெருமாள் தலைமை வகித்தாா். செயலா் ஏ.முனியாண்டி முன்னிலை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் பி.கிருஷ்ணசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.
ஆா்ப்பாட்டத்தின்போது, ஓய்வு பெறும் நாளில் பணிநீக்கம் மற்றும் 17 ஏ போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். மத்திய அரசைப் போன்று குறைந்தப்பட்ச ஓய்வூதியம் ரூ.9ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.
இதேபோல் திண்டுக்கல் வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, திண்டுக்கல் வட்டத் தலைவா் மு.சுருளிவேலு தலைமை வகித்தாா். செயலா் செ.ஜான்சன் கோரிக்கை விளக்க உரை நிகழ்த்தினாா். இதில் 30-க்கு மேற்பட்ட ஓய்வூதியா்கள் கலந்து கொண்டனா்.