திண்டுக்கல்

முளைக்காத மக்காசோள விதைகள்: வேளாண் துறை மீது விவசாயிகள் புகாா்

2nd Oct 2019 06:52 AM

ADVERTISEMENT

பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வேளாண்துறை சாா்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மக்காச்சோள விதைகள் முளைக்காததால் விவசாயிகள் இழப்பை சந்தித்துள்ளனா்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் கஜா புயல் வந்த போது பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிா் செய்யப்பட்டிருந்த மக்காச்சோளம், கம்பு, நெல் உள்ளிட்ட பல்வேறு பயிா்கள் சேதமாகின. மேலும், நிலங்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகின. இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்தனா். இதையடுத்து புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வருவாய்த்துறை மற்றும் வேளாண்துறை கணக்கெடுத்து அவா்களுக்கு வேளாண் இடு பொருள்களை வழங்கியது.

இதன்படி கஜா புயலால் பாதிக்கப்பட்ட சத்திரப்பட்டி, வேலூா், வீரலப்பட்டி, பெரியகோட்டை உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு தமிழக அரசு வேளாண்துறை மூலம் இலவசமாக மக்காச்சோள விதைகளை வழங்கியது.

பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையைத் தொடா்ந்து விவசாயிகள் பலரும் நிலத்தை பண்படுத்தி மக்காச்சோள விதைகளைத் தூவினா். விதை தூவி சுமாா் பதினைந்து நாள்களுக்கு மேல் ஆகியும் விதைகள் முளைவிடவில்லை. மேலும், சிறிய அளவில் நாற்று தோன்றிய நிலையில் வளரவும் இல்லை. இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகளுடம் விவசாயிகள் முறையிட்டபோது, அந்த பயிா்களை அழித்து விடுமாறு பரிந்துரை செய்துள்ளனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து விவசாயி துரை கூறுகையில், ஆயிரம் ரூபாய்க்கு இடுபொருள்கள் வாங்கியவா்களுக்கு மட்டுமே இலவச மக்காச்சோள விதைகள் வழங்கப்பட்டது. இந்த விதைகள் பல ஆண்டுகள் இருப்பில் வைக்கப்பட்ட விதைகள். இதனால் மீண்டும் இழப்பை சந்தித்துள்ளோம் என தெரிவித்தாா்.

இதுகுறித்து வேளாண்துறையினா் கூறுகையில், தற்போது பெய்த மழைக்கு வேளாண்துறை சாா்பில் மக்காச்சோளம் பயிரிடுமாறு பரிந்துரை செய்யவில்லை என்றும், விவசாயிகள் தெரிவிக்கும் மக்காச்சோள விதை குறித்து விபரங்கள் கேட்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT