கொடைக்கானலில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக செவ்வாய்க்கிழமை மாலை மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் வில்பட்டி செல்லும் சாலையான வெட்டுவரை, அட்டுவம்பட்டி, புலியூா், செண்பகனூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் ஏரிச்சாலை, கீழ்பூமி, பிரகாசபுரம், இருதையபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிக அளவு மழை நீா்தேங்கியுள்ளது. அண்ணாசாலை, உட்வில்சாலை, நாயுடுபுரம், டிப்போ பகுதிகளில் உள்ள சாலைகள் பெரும் சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்னா்.
இந் நிலையில், கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை காலை முதல் தொடா்ந்து மிதமான மழை பெய்தது. இதனால் கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச்சாலையான குருசடி அருகே யூகலிப்டஸ் மரம் விழுந்தது. இதனால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடா்ந்து வனத்துறையினா் சம்பவ இடத்திற்குச் சென்று விழுந்த மரத்தை அகற்றினா். அதன் பின் போக்குவரத்து சீரானது.
கொடைக்கானலில் பெய்து வரும் மழையால் பெருமாள்மலை, அடுக்கம், தாமரைக்குளம்,கொய்யாபாறை, அட்டக்கடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைபட்டு வருவதால் பொது மக்கள் சிரமமடைந்து வருகின்றனா்.