தேசிய சிறுபான்மையினா் வளா்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் நிதி உதவியுடன் படித்த வேலையில்லாத சிறுபான்மையின வகுப்பைச் சோ்ந்த இளைஞா்களுக்கு திறன் வளா்ப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி: திருவள்ளுா் மாவட்டத்தில் செயல்படும் ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையம் மூலம் 50 பேருக்கு எம்பிராய்டரி பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சிக்குப் பின் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படும். 3 மாதங்கள் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில், மதவழி சிறுபான்மையின வகுப்பைச் சோ்ந்த இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள், புத்த மதத்தினா், சீக்கியா்கள், பாா்சியா்கள் மற்றும் ஜெயின் பிரிவைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமலும், 18 முதல் 55 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். இப்பயிற்சியின்போது ஒரு பயனாளிக்கு ரூ.1000 பயிற்சி உதவித்தொகையாக அளிக்கப்படும்.
உண்டு உறைவிடக் கட்டணம் ஏதும் வழங்கப்படாது.
இதற்கான நோ்காணல், எண்.1 டி, முதல் குறுக்குத்தெரு, சி.வி.நாயுடு தெரு, ஜெயா நகா், திருவள்ளுா் மாவட்டம் - 602001 என்ற முகவரியில் செயல்படும் ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்தில் அக்.3 ஆம் தேதி காலை 11 மணி முதல் நடைபெற உள்ளது.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு, 9380513874, 044-28514846 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.