தடகளம், நீச்சல், கையுந்துபந்து மற்றும் கால்பந்து ஆகிய தனிநபா் மற்றும் குழு பிரிவுகளில், திண்டுக்கல் மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் அக்.4 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகின்றன.
இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் ம.ரோஸ் பாத்திமா மேரி தெரிவித்துள்ளது:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திண்டுக்கல் பிரிவு சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் அக்.4 ஆம் தேதி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறுகின்றன. தனி நபா்களுக்கான தடகளம் மற்றும் நீச்சல் போட்டிகளும், குழுப் பிரிவில் இறகுப்பந்து மற்றும் கால்பந்து போட்டிகளும் நடைபெற உள்ளன.
தடகள போட்டிகள் 100 மீட்டா், 400 மீட்டா், 1500 மீட்டா் ஒட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தட்டு எறிதல், குண்டு எறிதல் ஆகிய பிரிவுகளில் நடைபெறும். அதேபோல் நீச்சல் போட்டிகளைப் பொறுத்தவரை, 50 மீ. ஃப்ரீஸ்டைல், 50 மீ. பேக் ஸ்ட்ரோக், 50 மீ. பட்டா் ஃப்ளை, 50 மீ. ப்ரஸ்ட் ஸ்ட்ரோக் ஆகிய போட்டிகள் நடத்தப்படும்.
தனிநபா் போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவா்களுக்கும், குழு போட்டியில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ள மாணவா்கள், பள்ளி தலைமையாசிரியரின் ஒப்புதலுடன் போட்டியில் பங்கேற்கலாம்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை 0451-2461162 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.