பழனி: பழனியில் அரசுசாா்பில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட தனியாா் நிறுவன வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான இளைஞா்கள் மற்றும் பெண்களுக்கு உடனடியாக பணி ஆணைகள் வழங்கப்பட்டன.
பழனி-திண்டுக்கல் சாலை தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பழனி வட்டார வளா்ச்சி அலுவலா் நாகராஜ் தலைமை வகித்தாா். தொப்பம்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலா் சாந்தி முன்னிலை வகித்தாா். இந்த முகாமில் பழனி, ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி வட்டாரங்களை சோ்ந்த பெண்கள் மற்றும் இளைஞா்கள் பங்கேற்றனா்.
இந்த முகாமில் 5 ஆம் வகுப்பு முதல் பட்டயப்படிப்பு மற்றும் பட்டதாரி படிப்புவரை படித்து வேலையில்லாத 25 வயது முதல் 40 வயது வரையிலான பெண்கள் மற்றும் ஆண்கள் என நூற்றுக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.
முகாமில் நிதி நிறுவனம், பேப்பா் மில், கைப்பேசி தயாரிப்பு, காா் உதிரிபாகங்கள் தயாரிப்பு, காப்பீடு உள்பட பல்வேறு துறைகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டன.
இந்த முகாமில் அரசு சாா்பில் நடத்தப்படும் இலவச தொழிற்பயிற்சி குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இந்த முகாமில் தோ்வானவா்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநா் சந்தோஷ்குமாா் வழங்கினாா். இந்த முகாமில் திட்ட உதவி இயக்குநா் பிரபாவதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் காமேஷ்வரி உள்பட பலா் பங்கேற்றனா்.