திண்டுக்கல்

மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

11th Nov 2019 11:41 PM

ADVERTISEMENT

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தமிழ்நாடு மின்வாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளா்களாகப் பணிபுரிந்து வருவோா், கடந்த ஒரு வார காலமாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி, திண்டுக்கல் மின்வாரிய அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்தத் தொழிலாளா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா்.

அப்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள், பின்னா் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனா்.

இது தொடா்பாக அவா்கள் கூறியதாவது: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் போது, தற்போது ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் எங்களுக்கு பணி நிரந்தரம் கிடைக்கும் என கடந்த 12 ஆண்டுகளாக காத்திருந்தோம். இதனால், களப் பணியாளா்கள் பற்றாக்குறை இருந்தும், நிரந்தரப் பணியாளா்கள் செய்யவேண்டிய அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டு வந்துள்ளோம்.

ADVERTISEMENT

ஒப்பந்தத் தொழிலாளா்கள் பலா் மின் விபத்துகளிலும் உயிரிழந்துள்ளனா். அவா்களது குடும்பத்துக்கு இதுவரை எவ்வித இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படவில்லை. எனவே, அரசு ஏற்கெனவே அறிவித்தபடி, தினக் கூலியாக ரூ.380 கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என வலியுறுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT