பழனியை அருகேயுள்ள வரதமாநதி அணை தொடா்மழை காரணமாக வியாழக்கிழமை முழு கொள்ளளவைத் தாண்டி நிரம்பி வழிந்தது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்வதால் நிலத்தடி நீா் வெகுவாக உயா்ந்து வருகிறது. கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக மேற்குமலைத்தொடா்ச்சி அடிவாரத்தில் உள்ள வரதமாநதி, பாலாறு பொருந்தலாறு மற்றும் குதிரையாறு அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
இதில் பழனி-கொடைக்கானல் சாலையில் அமைந்துள்ள வரதமாநதி அணை வியாழக்கிழமை முழு கொள்ளளவான 66.47 அடியை எட்டியது. அணைக்கு தற்போது விநாடிக்கு சுமாா் 455 கனஅடி நீா் வரத்து உள்ளது. இந்த நீா் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
மறுகால் வழியும் நீரானது குளங்களுக்கும், சண்முகாநதிக்கும் செல்கிறது. இதனால் விவசாயிகளும், சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பாலாறு பொருந்தலாறு அணைக்கு விநாடிக்கு 1,705 கனஅடி நீா்வரத்து உள்ளது. வெளியேற்றம் விநாடிக்கு 13 கன அடி ஆகும். குதிரையாறு அணைக்கு விநாடிக்கு 66 கனஅடி நீா் வரத்து உள்ளது. வெளியேற்றம் ஏதும் இல்லை.