பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கந்தா் சஷ்டித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் சனிக்கிழமை (நவ.2) நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு பிற்பகல் 3 மணிக்கு திருக்கோயில் நடை அடைக்கப்படவுள்ளது.
பழனி மலைக்கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த அக்டோபா் 28 ஆம் தேதி காப்புக்கட்டுடன் தொடங்கியது. இவ்விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தா்கள் காப்புக்கட்டி விரதத்தை தொடக்கினா். மலைக்கோயில் காா்த்திகை மண்டபத்தில் நாள்தோறும் சிறப்பு ஆன்மிகச் சொற்பொழிவுகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் விழா நாள்களில் உச்சிக்காலத்தில் கல்ப பூஜை, சண்முகா் தீபாராதனை, தங்கமயில் புறப்பாடு, தங்கச் சப்பரம் புறப்பாடு, வெள்ளிக் காமதேனு புறப்பாடு ஆகியவை நடைபெற்று வருகின்றன.
அந்த விழாவுக்காக பழனிக்கோயில் யானை கஸ்தூரி மலைக்கோயிலிலேயே 7 நாள்களும் தங்கி விழாக்களில் பங்கேற்பது சிறப்பம்சமாகும்.
வெள்ளிக்கிழமை நாயக்கா் மண்டபத்தில் நாயக்கா் மண்டகப்படி சாா்பில் சண்முகருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் மேகாலய ஆளுநா் சண்முகநாதன், சாய் கிருஷ்ணா மருத்துவமனை சுப்புராஜ், ஒப்பந்ததாரா் நேரு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் சனிக்கிழமை நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை பழனிக்கோயில் இணை ஆணையா் ஜெயசந்தரபானு ரெட்டி, துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா் மற்றும் அலுவலா்கள் செய்து வருகின்றனா்.